'கரகாட்டக்காரன்' படம் 2-ம் பாகம்?
|தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் எடுக்க இயக்குனர்களிடம் ஆர்வம் உள்ளது. ஏற்கனவே ரஜினியின் எந்திரன், கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2-ம் பாகங்கள் வந்தன. தற்போது சந்திரமுகி, இந்தியன் படங்களின் இரண்டாம் பாகம் தயாராகிறது.
அஜித்குமாரின் பில்லா, விக்ரமின் சாமி, விஷாலின் சண்டைக்கோழி, தனுசின் வேலை இல்லா பட்டதாரி, லாரன்சின் காஞ்சனா உள்ளிட்ட பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. சிங்கம், அரண்மனை படங்கள் 3 பாகங்களாக வெளியானது.
இந்த நிலையில் கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா ஆகியோர் நடித்து 1989-ல் வெளியான கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடப்பதாகவும் இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இரண்டாம் பாகத்தில் ராமராஜன் கதாபாத்திரத்தில் நடிக்க சிவாவிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. கரகாட்டக்காரன் படம் அப்போது அதிக நாட்கள் ஓடி வசூல் சாதனை நிகழ்த்தியது. இதில் இடம்பெற்ற மாங்குயிலே, இந்த மான், குடகுமலை, மாரியம்மா, முந்தி முந்தி, ஊருவிட்டு ஊரு வந்து போன்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தன.
கவுண்டமணி, செந்திலின் வாழைப்பழம் மற்றும் சொப்பன சுந்தரி கார் காமெடி இன்று வரை மீம்ஸ்களாக வலம் வருகின்றன.