'ஈட்டி' பட இயக்குனர் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகும் சிவராஜ்குமார்
|தமிழில் சிவராஜ்குமார் ஹீரோவாக நடிக்கும் முதல் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார். இவர் பல ஆண்டுகளாக, தமிழ் ரசிகர்களிடமிருந்து மிகுந்த அன்பையும் வரவேற்பையும் பெற்று வருகிறார். அவரது கன்னட திரைப்படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. சமீபத்தில், ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்தில் ஒருசில காட்சிகள் மட்டுமே வந்திருந்தாலும் அவரது நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், நடிகர் சிவராஜ்குமார் 'ஜாவா' படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். தமிழ் மற்றும் கன்னடம் என இரு மொழிகளில் இந்தப் படம் உருவாக இருக்கிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்கும் இந்தப் படத்தை செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் தயாரிக்கின்றனர். இதற்கு முன், நடிகர் அதர்வா முரளி கதாநாயகனாக நடித்த 'ஈட்டி' மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான 'ஐங்கரன்'ஆகிய திரைப்படங்களை இயக்கிய ரவி அரசு மூன்றாவதாக தமிழில் இந்தப் படத்தை இயக்குகிறார்.
படம் குறித்து இயக்குனர் ரவி அரசு கூறுகையில், "இந்த படம் அவரது ரசிகர்களை 100 சதவீதம் திருப்திப்படுத்தும். செப்டம்பரில் படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த வாரம் 'ஜாவா' என்ற தலைப்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதற்கான கிளிம்ப்ஸ் காட்சியை படமாக்க உள்ளோம். நடிகர் சிவராஜ்குமார் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார், சமுத்திரக்கனி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார், என்றார்.