படப்பிடிப்பில் தனுசுடன் இணைந்த கன்னட நடிகர்
|அருண் மாதேஸ்வரன் டைரக்டு செய்யும் படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் தனுசுக்கு அண்ணனாக நடிக்கிறார். தற்போது படப்பிடிப்பில் சிவராஜ்குமார் இணைந்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் இந்த வருடம் மாறன், தி கிரே மேன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகி உள்ள 'வாத்தி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது. அடுத்து கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கிறார். ராக்கி, சாணிக்காகிதம் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான அருண் மாதேஸ்வரன் டைரக்டு செய்கிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து, 2-வது கட்ட படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் தனுசுக்கு அண்ணனாக நடிக்கிறார். தற்போது படப்பிடிப்பில் சிவராஜ்குமார் இணைந்துள்ளார். தனுசும், சிவராஜ்குமாரும் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. சிவராஜ்குமார் கூறும்போது, ''நான் தனுசின் மிகப்பெரிய ரசிகன். அவருடைய அனைத்து படங்களையும் பார்த்து இருக்கிறேன். இப்போது தனுசுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது" என்றார். ரஜினியின் ஜெயிலர் படத்திலும் சிவராஜ்குமார் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.