இந்திரா காந்தி வாழ்க்கை கதையை நாடாளுமன்றத்தில் படமாக்க அனுமதி கேட்கும் கங்கனா
|இந்திரா காந்தி வாழ்க்கை கதையை நாடாளுமன்றத்தில் படமாக்க அனுமதி கேட்டு கங்கனா நாடாளுமன்ற செயலாளருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
தமிழில் 'தாம்தூம்', ஜெயலலிதா வாழ்க்கை கதையான 'தலைவி' படங்களில் நடித்து பிரபலமான கங்கனா ரணாவத் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்துகள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். இதனால் வழக்குகளையும் சந்திக்கிறார். பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார். தற்போது மறைந்த பிரதமர் இந்திராகாந்தி வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் 'எமர்ஜென்சி' படத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். இந்த படத்தை அவரே டைரக்டும் செய்கிறார். இந்திரா காந்தி ஆட்சியின் நெருக்கடி நிலை பிரகடனத்தை படத்தில் காட்சிப்படுத்த உள்ளனர். அவரை பற்றிய சர்ச்சை கருத்துகள் படத்தில் இடம்பெறலாம் என்ற பேச்சும் உள்ளது. கங்கனாவின் இந்திராகாந்தி தோற்றம் ஏற்கனவே வெளியாகி வைரலானது. இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் 'எமர்ஜென்சி' படப்பிடிப்பை நடத்த கங்கனா ரணாவத் திட்டமிட்டு உள்ளார். இதற்கான அனுமதியை கேட்டு நாடாளுமன்ற செயலாளருக்கு கங்கனா கடிதம் எழுதி உள்ளார். நாடாளுமன்றத்தில் பொதுவாக படப்பிடிப்பு நடத்துவது இல்லை. கங்கனா அனுமதி கேட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.