இந்தி திரை உலகினரை சாடிய கங்கனா ரணாவத்
|மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கத்தால் பாலிவுட் நம் கலாசாரத்திலிருந்து விலகிச் செல்கிறது என நடிகை கங்கனா ரணாவத் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சை கருத்துகளை துணிச்சலாக வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். தற்போது ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று கங்கனா ரணாவத் பேசும்போது, ''இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் படங்கள் அதிகம் வருகின்றன. காந்தாரா படம் நுணுக்கமான பக்தி மற்றும் ஆன்மித்தோடு தொடர்பு உடையதாக உள்ளது. பொன்னியின் செல்வன் படம் சோழர்கள் வரலாற்றை பற்றியது. காந்தாரா, பொன்னியின் செல்வன் படங்களில் இடம்பெற்றுள்ள இந்து தொடர்பான விஷயங்களை பார்வையாளர்கள் தங்களோடு தொடர்புபடுத்தி பார்க்கிறார்கள். மேற்கத்திய கலாசாரம் காரணமாக இந்தி பட உலகம் நமது கலாசாரத்தை விட்டு விலகி இருக்கிறது. மேற்கத்திய தாக்கம் உள்ள படங்களையே எடுக்கிறார்கள். அப்படிப்பட்ட படங்களை மக்கள் இனிமேல் தங்களோடு தொடர்புபடுத்த மாட்டார்கள்.
நடிகர்களை ரோல் மாடல்களாக வைத்துக்கொள்ள கூடாது என்றும், ஸ்ரீராமா், அப்துல் கலாம் போன்றோரை ரோல் மாடலாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் மக்கள் நினைக்கிறார்கள். இந்த விழிப்புணர்வு நடிகர்களை கொண்டாடும் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. சினிமாவில் வாரிசுகள் ஆதிக்கம் குறையவில்லை" என்றார்.