நடிகை கங்கனா ரணாவத்துக்கு டெங்கு காய்ச்சல் உறுதி
|டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள போதும் கங்கனா தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 'தாகத்' திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது கங்கனா ரணாவத் இயக்கி நடித்துள்ள படம் 'எமர்ஜென்சி'.
இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மட்டும் மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அண்மையில் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது.
டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள போதும் கங்கனா தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இதனை படக்குழு தனது சமூக வலைதளபக்கத்தில் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் கங்கனா படப்பிடிப்பு தளத்தில் தன் பணிகளை மேற்கொள்ளும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.