இந்தியாவின் முதல் பிரதமர் யார்? - அதிர வைத்த பா.ஜ.க வேட்பாளர் கங்கனாவின் பதில்
|தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கங்கனா, அதில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திர போஸ் என்று பேசி அதிர்ச்சி அளித்துள்ளார்.
மும்பை,
கங்கனா ரனாவத் 2006-ம் ஆண்டு "கேங்ஸ்டர்" திரைப்படம் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானார். தனது முதல் படம் அபார வெற்றி பெற்றது அதுமட்டுமின்றி சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றார். அடுத்தடுத்து வோ லம்ஹே, பேஷன், குயின் என ஹிட் கொடுத்தார்.கங்கனா நடித்த 'குயின்' படம் மிகவும் வித்தியாசமான கதைகளம் கொண்டது. இந்த படம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாறாக உருவாகி வெளியான 'தலைவி' படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இவர் நடிப்பில் கடந்த ஆண்டு தமிழில் 'சந்திரமுகி 2' திரைப்படமும் மற்றும் இந்தியில் 'தேஜஸ்' திரைப்படமும் வெளியாகின. இரண்டு படங்களும் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று தோல்வியை சந்தித்தது.
சமீபத்தில் அம்பானி இல்ல திருமணத்தில் நடனம் ஆடுவது பற்றி இவர் தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆயின.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த கங்கனா, இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திர போஸ் என்று பேசியது தான் இத்தனை சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இத்தனைக்கும் அத்தனை வெள்ளந்தியாய், தான் தெரிவித்த கருத்து சரியானது எனும் தொனியில் பேசியிருக்கிறார் கங்கனா. "பா.ஜ.க வேட்பாளர்களின் தேர்வு இது தான்" என்று மேடைகளில் எதிர்கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், நடிகை கங்கனா ரனாவத் பா.ஜ.க சார்பில் இமாச்சல பிரதேசம், மாண்டி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் அவரது தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கங்கனா, அதில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திர போஸ் என்று பேசி அதிர வைத்துள்ளார்.
சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய தலைவர்களில் ஒருவர் சுபாஷ் சந்திர போஸ். அவர் பிரதமராக பதவி வகித்ததில்லை. இந்திய தேசிய காங்கிரஸில் பணியாற்றிய பின் 1939 -ம் ஆண்டு அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியைத் தொடங்கினார்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. பள்ளிக் குழந்தைகளுக்குத் தெரிந்த இந்த விஷயம் கூட கங்கனாவுக்குத் தெரியவில்லையே என இணையத்தில் பலரும் இந்த காணொலியைப் பகிர்ந்து கேலி செய்கின்றனர்.இன்னும் சிலர், 'கங்கனா பா.ஜ.க தலைவர்களையே விஞ்சி விடுவார். அந்த அளவுக்கு அவர் புத்திசாலி' என்று வஞ்சபுகழ்ச்சி செய்கின்றனர்.
நடிகர் பிரகாஷ்ராஜ் கங்கனாவின் இந்த காணொலிக்கு, 'ஜோக்கர் கட்சியின் கோமாளிகள் இவர்கள் தான். என்ன ஒரு அவமானம்' என்று கருத்து தெரிவித்துள்ளார்.