சந்திரமுகி 2-ல் நடித்த கங்கனா நெகிழ்ச்சி
|ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் 2005-ல் திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராக உள்ளது. இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாகவும் கங்கனா ரணாவத் நாயகியாகவும் நடித்துள்ளனர். பி.வாசு இயக்கி உள்ளார்.
சந்திரமுகி முதல் பாகத்தில் அரண்மனையில் நடக்கும் அமானுஷ்ய விஷயங்களை காட்சிப்படுத்தி இருந்தனர். இரண்டாம் பாகம் அதன் தொடர்ச்சியாக இருக்குமா அல்லது வேறு மாதிரியான பேய் படமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்தநிலையில் சந்திரமுகி 2-ம் பாகத்தில் தனது காட்சிகளில் நடித்து முடித்து விட்டதாக கங்கனா ரணாவத் தெரிவித்து இருக்கிறார். அவர் நெகிழ்ச்சியோடு வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சந்திரமுகி 2-ம் பாகத்தில் நான் நடித்து முடித்து விட்டேன். இங்கு நான் சந்தித்த சிறந்த மனிதர்களை பிரிந்து செல்கிறேன் என்பது வருத்தமாக இருக்கிறது. கடைசி நாளில் படப்பிடிப்பு தொடங்கும் முன்பு லாரன்சுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.
பின்னணி நடனக்கலைஞராக சினிமா வாழ்க்கையை தொடங்கி இன்று வெற்றி பெற்ற டைரக்டராகவும் நடிகராகவும் நடன கலைஞராகவும் நல்ல மனிதராகவும் அவர் வலம் வருகிறார். லாரன்சுடன் நடித்தது பெருமையாக உள்ளது'' என்று கூறியுள்ளார்.