இயக்குனராக களமிறங்கும் சண்டை பயிற்சியாளர்கள்... கமலின் 237வது படத்தின் அறிவிப்பு வெளியானது...!
|கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு 2025ம் ஆண்டு தொடங்க உள்ளது.
சென்னை,
நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு பிறகு கமல்ஹாசனின் 234-வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். 37 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணையவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிகை திரிஷா, நடிகர்கள் துல்கர் சல்மான், ஜெயம்ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு ''தக் லைப்' என பெயரிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கமலின் 235வது படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தும் 236வது படத்தை இயக்குனர் நெல்சனும் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் தற்போதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் கமலின் 237வது படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதனை நடிகர் கமல்ஹாசன் தனது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இந்த படத்தை பிரபல சண்டை பயிற்சி இயக்குனர்கள் அன்பறிவ் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேசனல் மற்றும் ஆர். மகேந்திரனின் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு 2025ம் ஆண்டு தொடங்க உள்ளது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.