கமலின் மழலைக் கையெழுத்து
|12.8.1960 அன்று களத்தூர் கண்ணம்மா திரைக்கு வந்தது. ஏவி.எம். நிறுவனத்தின் படம். ஜெமினிகணேசன், சாவித்திரி ஜோடிக்கு கமல்ஹாசன் மகனாக வருவார்.
முதலில் அதில் நடிக்க டெய்சி ராணி என்ற ஒரு குழந்தை நட்சத்திரத்தை தேர்வு செய்து இருந்தார்கள். அப்போது தங்களது குடும்ப டாக்டர் மூலமாக கமல்ஹாசன் பற்றி மெய்யப்ப செட்டியாருக்கு தகவல் கிடைத்தது. மழலையாக இருந்த கமலின் சுறுசுறுப்பு, வாய்த்துடுக்கு அவருக்குப் பிடித்துப் போனது. உடனே குழந்தை நட்சத்திரமாக கமல்ஹாசனை நடிக்கவைத்தார். அவரும் சிறப்பாக நடித்தார். அந்த ஆண்டு சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது களத்தூர் கண்ணம்மா படத்துக்கு கிடைத்தது. குழந்தை நட்சத்திரத்திற்கான ஜனாதிபதியின் தங்கப்பதக்க விருது கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. கமல் அறிமுகமே விருதுடன் தொடங்கியது இங்கே குறிப்பிடத்தக்கது!
தூத்துக்குடி சார்லஸ் தியேட்டரில் களத்தூர் கண்ணம்மா ஓடிக்கொண்டு இருந்தது. 9.10.1960 அன்று கமல்ஹாசன் தன்னுடைய தாயாருடன் படம் பார்க்க வந்தார். அவர்களை ஏவி.எம்.சரவணன் அழைத்து வந்திருந்தார். தங்களது தியேட்டருக்கு வந்தவர்களை அதன் உரிமையாளர் சேவியர் மிசியர் அன்புடன் உபசரித்தார்.
சார்லஸ் தியேட்டரின் பெருமை பற்றியும், அவர் கொடுத்த வரவேற்பு பற்றியும் ஏவி.எம்.சரவணன், அங்கு இருந்த பதிவேட்டில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டு இருக்கிறார்.
"நானும் கமல்ஹாசனும் அவருடைய தாயாரும் 'ஏவி.எம்' நிறுவனத்தின் 'களத்தூர் கண்ணம்மா' படத்தை அன்பான உபசரிப்போடு, இந்த பெரிய இனிய திரையரங்கில் பார்த்து மகிழ்ந்தோம். திரு.சேவியர் மிசியரின் இதயம் அதைவிட பெரியதும் இனிமையானதும் என்பதை அறிந்து கொண்டோம்"
இவ்வாறு ஏ.வி.எம். சரவணன் அதில் தனது கைப்பட ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். அதுமட்டும் அல்ல, 5 வயதுகூட நிரம்பாத கமல்ஹாசன், அதன் அருகே மழலைத் தமிழில் 'கமல்' என்று கையெழுத்திட்டு இருக்கிறார்.