இந்தியன் 2 : மே 16-ந் தேதி பிரமாண்ட இசை வெளியீடு
|'இந்தியன் 2 ' படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா வருகிற மே மாதம் 16-ந் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996- ம் ஆண்டில் நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான படம் 'இந்தியன்'. இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வசூல் சாதனை புரிந்தது.
இப்படத்தில் நடிகர் கமலுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். மேலும் சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் என பலர் நடித்து இருந்தனர்.இதில் கமல் இந்தியன் தாத்தா வேடத்தில் எதிரிகளை அழிப்பது ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.
இதை தொடர்ந்து தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு 'இந்தியன் 2 ' படத்தை இயக்குனர் ஷங்கர் எடுத்துள்ளார். இப்படத்தில் கமல், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். லைகா மற்றும் ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.
இந்நிலையில் 'இந்தியன் 2 ' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா வருகிற மே மாதம் 16-ந் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
இவ்விழாவில் இசையமைப்பாளர் அனிருத், இந்த பாடல்களை நேரடியாக பாட உள்ளார். இதில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.
மேலும் வருகிற மே முதல் வாரத்தில் 'இந்தியன் 2 ' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு நடைபெறும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.