கமல்ஹாசனின் 'தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு!
|நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘தக் லைப்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
சென்னை,
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் 'தக் லைப்'. 36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி இணைந்துள்ளது. திரிஷா, சிம்பு, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் படத்துக்கு இசையமைக்கிறார்.
இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றன. ஆக்சன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் கமல்ஹாசன் 3 வேடங்களில் நடிக்கிறார்.
நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் அறிமுகமாகி 65 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து 'தக் லைப்' படக்குழுவினர் சமீபத்தில் கொண்டாடியுள்ளனர். களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான கமல்ஹாசன், இதுவரை 233 படங்களில் நாயகனாக நடித்து இந்திய சினிமாவின் தனித்துவமிக்க கலைஞராக இருக்கிறார்.
இந்நிலையில் படத்தின் டிஜிட்டல் உரிமம் ரூ.150 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதுவரை எந்த படமும் விற்பனையாகாத விலையில் விற்பனையாகி ரெக்கார்ட் பிரேக் செய்துள்ளது இந்த திரைப்படம். மேலும் 'தக் லைப்' படத்தினை அடுத்த ஆண்டு மே மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து படக்குழு விரைவில் அதிகாரபூர்வ தகவல் அளிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் படக்குழுவுடன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.