'இந்தியன்' படத்தில் நடிக்க மறுத்த கமல்ஹாசன் - ஏன் தெரியுமா?
|நடிகர் கமல்ஹாசன் 'இந்தியன்' படத்தில் நடிக்க மறுத்ததாக கூறினார்.
சென்னை,
உலக நாயகன் என்று அழைக்கப்படுபவர் கமல்ஹாசன். கடந்த 1996-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்த படம் இந்தியன். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனால் 27 வருடங்களுக்கு பிறகு தற்போது இந்தியன் படத்தின் 2-ம் பாகம் உருவாகி உள்ளது.
நேற்று இந்தியன் 2 படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் 'இந்தியன்' படத்தில் நடிக்க மறுத்ததாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
இயக்குனர் ஷங்கர் இப்போது எப்படி ஒரு அனுபவம் வாய்ந்தவராக இருக்கிறாரோ, அப்படி இந்தியன் 1 எடுக்கும்போதே இருந்தார். இதில் விஷயம் என்னவென்றால் முதலில் 'இந்தியன்' படத்தில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. இதேபோன்று வேறு படம் என்னிடம் அப்போது இருந்தது. இதுபோன்ற பிரச்சினைகள் நடிகர்களுக்கு வரும்.
எனக்கும் அப்போது வந்தது. இதனால் நான் என் சம்பளத்தை உயர்த்தி கேட்டேன். ஆனாலும் தயாரிப்பாளர் உறுதியாக இருந்தார். இயக்குனரும் இந்த படத்தை எடுத்தால் என்னை வைத்துதான் எடுப்பேன் என்றார். இது என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது', என்றார்.
இந்தியன் 2 படம் அடுத்த மாதம் 12-ம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும், கமல் வில்லனாக நடித்துள்ள 'கல்கி 2898 ஏடி' படம் நாளை வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.