ஷாருக்கான் படத்தில் நடிக்க மறுத்த கமல்ஹாசன்
|கமல்ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'தக் லைப்' படத்தில் நடித்து வருகிறார்.
சென்னை,
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் ஷாருக்கான். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பதான், ஜவான் மற்றும் டுங்கி ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தன. தற்போது கிங் படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த 2002-ம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான படம் மெயி ஹூன் நா. பரா கான் இயக்கிய இப்படத்தில் சுஷ்மிதா சென், அம்ரிதா ராவ், சுனில் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். சமீபத்தில் ஒரு நேர்காணலில் இயக்குனர் பரா கான், இப்படத்தில் வில்லனாக நடிக்க முதலில் கமல்ஹாசனை அனுகியதாக கூறினார். இருந்தபோதும் கமல் அதில் நடிக்க மறுத்திருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்,
'நான் கமல்ஹாசனை சந்தித்து பேச சென்னை சென்றிருந்தேன். அப்போது அவர் என்னை தனது அலுவலகத்திற்கு அழைத்து சென்று மதிய உணவு வழங்கினார். அப்போது படத்தில் நடிப்பது குறித்து பேசினேன். ஆனால், அவர் அந்த பாத்திரத்தில் நடிக்க மறுத்துவிட்டார்,என்றார்.
பின்னர்தான், அந்த பாத்திரத்தில் நடிக்க சுனில் ஷெட்டியை தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குனர் பரா கான். கமல்ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'தக் லைப்' படத்தில் நடித்து வருகிறார். 36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி இணைந்துள்ளது. திரிஷா, சிம்பு, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் படத்துக்கு இசையமைக்கிறார்.