"நடிப்புக் கலையின் உச்சம்" - நடிகர் சிவாஜிக்கு கமல்ஹாசன் புகழாரம்
|மறைந்த நடிகர் சிவாஜியின் பிறந்தநாளையொட்டி நடிகர் கமல்ஹாசன் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை,
நடிகர் சிவாஜி கணேசனின் 97வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சிவாஜி கணேசனின் சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
கடந்த 2001ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சிவாஜி கணேசன் மறைந்தார். சிவாஜி கணேசனின் உடல் மறைந்தாலும் அவரது நடிப்பு தமிழ் சினிமா உள்ளவரை இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நடிகர் சிவாஜி கணேசன் கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷன், உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார் என்பதும் அவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் தேசிய விருது பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிவாஜி கணேசனின் பிறந்தநாளையொட்டி நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், "காலங்கள் மாறலாம், தொழில் நுட்பங்கள் கூடலாம், சினிமாவின் முகமே மாற்றத்துக்கு இலக்காகியிருக்கலாம். ஆனால், நடிப்புக் கலையின் உச்சம் என்பது எப்படி இருக்கும் என்று காட்டிய மாபெரும் கலைஞன் சிவாஜி சாரின் பங்களிப்பு மறக்கவொண்ணாதது. பிரமிக்க வைக்கும் சாதனைகளைச் செய்துகாட்டியவரை பிறந்த நாளில் வணங்குகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாளுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.