90 வயது முதியவராக நடிக்கும் கமல்ஹாசன் - ரகுல்பிரீத் சிங் நெகிழ்ச்சி
|இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் வயதான தோற்றத்துக்கு மாற பல மணிநேரம் மேக்கப் போடுவதாக ரகுல் பிரீத் சிங் நெகிழ்ச்சியோடு தெரிவித்து உள்ளார்.
'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். இதில் நாயகிகளாக காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் ஆகிய இருவரும் நடிக்கின்றனர். 50 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் தாத்தா கதாபாத்திரத்தை யாரோ திருட்டுத்தனமாக படம் பிடித்து வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர். அது வைரலாகி வருகிறது. இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் வயதான தோற்றத்துக்கு மாற பல மணிநேரம் மேக்கப் போடுவதாக ரகுல் பிரீத் சிங் நெகிழ்ச்சியோடு தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ''இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் 90 வயது முதியவராக நடிக்கிறார். வயதான தோற்றத்துக்கு மேக்கப் போட 5 மணிநேரம் ஆகிறது. அதிகாலை 5 மணிக்கே வந்து மேக்கப் போட்டுக்கொள்ள உட்கார்ந்து விடுகிறார். மேக்கப் போட்டு முடித்து காலை 10 மணிக்குத்தான் படப்பிடிப்பு அரங்குக்கு வருகிறார். படப்பிடிப்பு முடிந்து அவர் போட்டுக் கொண்ட மேக்கப்பை கலைக்க மட்டுமே 2 மணி நேரம் ஆகிறது. அந்த கஷ்டங்களை அவர் பொருட்படுத்துவதே இல்லை.
சினிமாவில் ஒரு அங்கமாகவே அவர் இருக்கிறார். 100 ஆண்டுகால சினிமாவில் 60 ஆண்டுகளுக்கு மேலாக அவர் பங்களிப்பு உள்ளது. சினிமாவை பற்றி அதிகம் தெரிந்தவர்கள் கமல்ஹாசனை விட வேறு யாரும் இருக்க முடியாது" என்றார்.