< Back
சினிமா செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல் அறிவிப்பு
சினிமா செய்திகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல் அறிவிப்பு

தினத்தந்தி
|
6 Aug 2024 6:27 PM IST

நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சென்னை,

உலகளவில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்திய மொழிகளிலும் நடைபெற்று வருகிறது. தமிழில் பிரபல தொலைக்காட்சியில் 2016 -ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். வெறும் பொழுதுபோக்கு அம்சத்திற்காக இல்லாமல் பல சினிமா அனுபவங்களையும் புத்தகங்களையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தினார். இந்த நிலையில், தொகுப்பாளராக கடந்த 7 ஆண்டுகளாக பொறுப்பு வகித்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய எங்கள் பயணத்திலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். சினிமா பணிகள் காரணமாக, பிக் பாஸ் தமிழ் சீசனின் வரவிருக்கும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை. உங்கள் இல்லங்களில் உங்களைச் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. உங்கள் அன்பையும் பாசத்தையும் நீங்கள் எனக்கு கொடுத்துள்ளீர்கள்

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை இந்தியாவின் சிறந்த தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக மாற்றுவதற்கு போட்டியாளர்களின் உற்சாகமான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பங்களிப்பே காரணம். உங்கள் ஒவ்வொருவருக்கும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கும் நான் மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கடைசியாக, விஜய் டிவியின் அற்புதமான குழுவிற்கும், இந்த நிகழ்ச்சியை மாபெரும் வெற்றியடையச் செய்வதில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு குழு உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த சீசன் இன்னொரு வெற்றியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கமல்ஹாசன் விலகியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மேலும் செய்திகள்