உடற்பயிற்சி மூலம் எடையைக் குறைத்த காஜல் அகர்வால்
|பிரசவத்திற்குப் பின் காஜல் அகர்வாலின் எடை கூடியது. கடுமையான உடற்பயிற்சி மூலம் எடையைக் குறைத்துள்ளார்..
சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்தபோதே, தொழில் அதிபர் கவுதம் கிச்சலு என்பவரை காஜல் அகர்வால் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு 'நீல் கிச்சலு' என பெயர் சூட்டி உள்ளனர்.
குடும்பம், குழந்தை என செட்டில் ஆகிவிட்டதால் 'இந்தியன்-2' படத்தில் காஜல் அகர்வால் நடிக்க மாட்டார் என்றே கூறப்பட்டது. ஆனால், "அது உண்மை இல்லை. 'இந்தியன்-2' படத்தில், நான் நிச்சயம் நடிக்கிறேன். படப்பிடிப்பில் விரைவில் பங்கேற்க உள்ளேன்" எனக்கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதற்கிடையில் பிரசவத்திற்குப் பின் காஜல் அகர்வாலின் எடை கூடியது. இதனால் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டார். தீவிர உணவு கட்டுப்பாட்டையும் அவர் கடைப்பிடித்தார். இதன் மூலமாக காஜல் அகர்வால் மீண்டும் மெலிந்த தேகத்துக்கு மாறியுள்ளார்.
மும்பையில் வசித்து வரும் அவர், தற்போது 'இந்தியன்-2' படப் பிடிப்புக்காக சென்னைக்கு புறப்பட்டு உள்ளார். விமான நிலையத்தில் அவரைக் கண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர். சமூக வலைத்தளங்களிலும் 'காஜல் அகர்வால் ரிட்டர்ன்ஸ்' என்று பதிவிட்டு மகிழ்ச்சி கொள்கிறார்கள். நினைத்தபடி எல்லாமே நடப்பதால் காஜல் அகர்வாலும் உற்சாகமாக காணப்படுகிறார்.