திரை துறையில் 19 ஆண்டுகள்... தமன்னாவுக்கு காஜல் அகர்வால் வாழ்த்து
|ஏறக்குறைய 2 தசாப்தங்களாக திரை துறையில் இருந்து வரும் டார்லிங் தமன்னாவுக்கு எனது பாராட்டுகள் என காஜல் அகர்வால் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
சென்னை,
நடிகை தமன்னா முதன்முறையாக சாந்த் சா ரோஷன் ஷேரா என்ற இந்தி படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். தொடர்ந்து தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்து புகழ் பெற்றார். 2006-ம் ஆண்டு வெளியான கேடி படத்தில் நடித்து, அவர் தமிழில் அறிமுகம் ஆனபோதும், பையா, பாகுபலி படங்கள் அவருக்கு பெரும் வெற்றியை தேடி தந்தன.
கடைசியாக தமிழில் அவர் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை தமன்னா திரை துறையில் நடிக்க வந்து 19 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இதுபற்றி நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், தமன்னாவின் போற்றத்தக்க 19 ஆண்டுகள். ஏறக்குறைய 2 தசாப்தங்களாக திரை துறையில் இருந்து வரும் டார்லிங் தமன்னாவுக்கு எனது பாராட்டுகள். உங்களுடைய பாசமிக்க ரசிகர்களின் போஸ்டர்கள் மிக அழகாக உள்ளன என பதிவிட்டு உள்ளார்.
அவற்றில் ஒரு போஸ்டரில், தமன்னா இளஞ்சிவப்பு வண்ண ஆடையில், சோபா ஒன்றில் அமர்ந்து இருக்கிறார். அவர் மேல் ரோஜா இதழ்கள் பொழிவது போல் போஸ்டர் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மற்றொரு போஸ்டரில், தமன்னாவின் முதல் படம் மற்றும் ஜெயிலர் படத்தில் காவாலா பாடலில் தோன்றும் காட்சிகளை கொண்ட புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
நடிகை காஜல் அகர்வாலின் பதிவுக்கு பதிலாக, தமன்னா தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டார். பல ஆண்டுகளாக நீடித்து வரும் உங்களின் ஈடுஇணையற்ற ஆதரவு மற்றும் அன்பு ஆகியவை வியக்க வைக்கிறது. உங்களை போன்ற நண்பர்களால், எனது இந்த பயணம் மதிப்பிற்குரிய ஒன்றாகிறது.
என்னுடைய ஆச்சரியம் நிறைந்த ரசிகர்கள் அனைவருக்கும் கூறுவது என்னவென்றால், உங்களுடைய அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வம் ஆகியவையே என்னுடைய பணியை செய்வதற்கான இயக்கு சக்தியின் பின்னணியாக உள்ளன.
நீங்கள் அனைவரும் விரும்ப கூடிய படங்களை தொடர்ந்து உங்களுக்கு வழங்குவேன் என நான் உறுதி கூறுகிறேன். இன்னும் நிறைய ஆச்சரியமிக்க ஆண்டுகள் அன்பாலும், எண்ணற்ற நினைவுகளாலும் நிரப்பப்பட இருக்கின்றன என அதில் தெரிவித்து உள்ளார்.
2023-ம் ஆண்டு தொடக்கத்தில், நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற தொடரில் நடித்து ரசிகர்களிடம் பெரும் புகழ் பெற்றார். இதன்பின்னர், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்திலும், தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த போலா சங்கர் படத்திலும், மலையாளத்தில் திலீப் நடிப்பில் வெளிவந்த பாந்திரா படத்திலும் நடித்து உள்ளார். அடுத்து ஒடேலா 2 படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர, வேதா மற்றும் ஸ்த்ரீ 2 உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.