< Back
சினிமா செய்திகள்
சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால்
சினிமா செய்திகள்

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால்

தினத்தந்தி
|
7 Aug 2022 3:09 PM IST

'இந்தியன் 2' படத்தில் நடிப்பதை நடிகை காஜல் அகர்வால் உறுதிப்படுத்தியுள்ளார்.

கமல்ஹாசன் நடிப்பில் 'இந்தியன்-2' படம் இயக்கப் போவதாக ஷங்கர் அறிவித்தார். படப்பிடிப்பு பணிகளும் தொடங்கியது. பின்னர் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. அதன் பின்னர் ஷங்கரும், கமல்ஹாசனும் வெவ்வேறு படங்களில் பிஸியானார்கள். 'விக்ரம்' பட வெற்றிக்குப் பிறகு, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன், 'இந்தியன்-2 நிச்சயம் தொடங்கும்' என தெரிவித்திருந்தார். 'இந்தியன்-2' படத்தில் காஜல் அகர்வால் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இதற்கிடையில் படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. சமீபத்தில் குழந்தை பெற்றெடுத்த காஜல் அகர்வால் இதற்கு எந்த கருத்தும் கூறாமல் அமைதியாக இருந்தார். இதனால் அவருக்கு மாற்றாக வேறொரு கதாநாயகி நடிப்பார் என்று கருதப்பட்டது.

இந்த நிலையில் சமூக வலைதளத்தில் காஜல் அகர்வால் ஒரு தகவலை பதிவிட்டு இருக்கிறார். அதில், 'இந்தியன்-2 படத்தில் நான் நிச்சயம் நடிக்கிறேன். படப்பிடிப்பு செப்டம்பர் 13-ந்தேதி முதல் தொடங்குகிறது', என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வந்த வதந்திகளுக்கு காஜல் அகர்வால் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

'இந்தியன்-2' படத்தின் படப்பிடிப்பு பணிகள் மீண்டும் தொடங்க உள்ளதையொட்டி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்