'கைதி 2' படம்: அப்டேட் கொடுத்த நடிகர் கார்த்தி
|'மெய்யழகன்' படத்தின் புரமோசன் நிகழ்ச்சியின் போது 'கைதி 2' படத்தின் அப்டேட்டை நடிகர் கார்த்தி வெளியிட்டார்.
சென்னை,
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆக்சன் திரில்லர் திரைப்படமாக கடந்த 2019-ல் வெளியான திரைப்படம் 'கைதி'. இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. நடிகர் கார்த்தி மனதில் நிற்கும்படியான ரோலில் நடிக்க கதாநாயகி, பாடல் என எதுவுமே இல்லாமல், கார்த்தியை இதற்குமுன் பார்த்திடாத ஒரு பரிணாமத்தில் காட்டிய படம் 'கைதி'.
தற்போது நடிகர் கார்த்தி இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் 'மெய்யழகன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதற்காக படக்குழு படத்திற்கான புரமோசன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த 'மெய்யழகன்' படத்தின் புரோமசன் நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் கார்த்தியும் கலந்து கொண்டார்.
அப்போது, 'மெய்யழகன்' படம் உருவான விதம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கார்த்தி பேசினார். அப்போது, ரசிகர்கள் பலரும் 'கங்குவா' என்று கத்தினார்கள். அதற்கு நவம்பர் 14-ம் தேதி 'கங்குவா' வெளியாக உள்ளதாக குறிப்பிட்டார். அதனையடுத்து, 'கைதி 2' என்று கத்தினார்கள். அதற்கு அடுத்த ஆண்டு 'கைதி 2' படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் எனவும் ரசிகர்களிடம் தெரிவித்தார்.
இதற்கிடையில், அடுத்ததாக கார்த்தி 'சர்தார் 2' படத்தில் அவர் கவனம் செலுத்த உள்ளார். அதனை முடித்துவிட்டு 'கைதி 2' படப்பிடிப்பில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.