மாதவனுடன் மீண்டும் நடிக்கும் ஜோதிகா
|குழந்தைகளின் படிப்பு மற்றும் பெற்றோர் நலனுக்காக மும்பையில் தங்கியுள்ள ஜோதிகா, பாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்த ஜோதிகா, நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் மலையாளத்தில் மம்முட்டியுடன் ஜோதிகா நடித்த 'காதல் தி கோர்' படம் திரைக்கு வந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
தற்போது குழந்தைகளின் படிப்பு மற்றும் பெற்றோர் நலனுக்காக மும்பையில் தங்கியுள்ள ஜோதிகா, பாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி இருக்கும் 'சைத்தான்' படத்தில் ஜோதிகா நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பாகவே, இந்தி சினிமாவில் ஜோதிகா நடித்திருந்தார். அந்த வகையில் 26 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்தி படத்தில் ஜோதிகா நடிக்கிறார். 'சைத்தான்' படத்தில் நடிகர் மாதவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜோதிகா-மாதவன் நடிப்பில் வெளியான 'டும்... டும்... டும்...', 'பிரியமான தோழி' ஆகிய படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன.
அந்தவகையில் மாதவனும், ஜோதிகாவும் இந்தி படத்தில் இணைந்து நடிப்பது ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது.