மன்சூர் அலிகான் முன் ஜாமீன் மனு மீதான உத்தரவை தள்ளிவைத்த நீதிபதி...!
|நடிகை திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
சென்னை,
நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன. நடிகர் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு நடிகை திரிஷா 'எக்ஸ்' வலைதள பக்கத்தில், தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.
மன்சூர் அலிகான் மீது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் டி.ஜி.பி.க்கு, தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. தேசிய மகளிர் ஆணையத்தின் உத்தரவை ஏற்று, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோருக்கு, டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதையடுத்து மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று விசாரணைக்கு ஆஜராகக்கோரி சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பினர்.
இதையடுத்து நேற்று மன்சூர் அலிகான் சென்னை, ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நடிகை திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு, என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் மன்சூர் அலிகான் முன் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவானது நீதிபதி அல்லி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. இதில் மன்சூர் அலிகான் தரப்பில், உள்நோக்கத்துடன் எந்த கருத்தையும் கூறவில்லை. மேலும் நடிகை திரிஷா தரப்பில் எந்த புகாரும் அளிக்கவில்லை, என்று கூறப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி இந்த மனு மீதான உத்தரவை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.