ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' படத்தின் செகண்ட்லுக் போஸ்டர் வெளியானது
|ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு 'ஜீனி' என்று பெயரிடப்பட்டுள்ளது.
சென்னை,
ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு 'ஜீனி' என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதில் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி, தேவயானி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அர்ஜுனன் இயக்கும் இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இவர் தயாரிக்கும் 25-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார். அதிக பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படத்தை தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிட உள்ளனர். 'ஜீனி' படத்தின் படப்பிடிப்புக்காக சென்னையில் ரூ.2 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது.
இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் செகண்ட்லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் ஜெயம் ரவி அலாவுதீன் பூதம் போல் காட்சியளிக்கிறார். கல்யாணி பிரியதர்சன், வாமிகா கபி, கீர்த்தி ஷெட்டி, தேவயானி ஆகியோரும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், இவர்கள் அனைவரும் பறக்கும் கம்பளத்தில் வானத்தில் பறந்து கொண்டு இருப்பது போன்று இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.