ஹிருது ஹாரூன் நடித்த "ஆல் வி இமேஜின் அஸ் லைட்": கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டி
|கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” திரைப்படம் கேன்ஸ் பாம் டி'ஓர் விருதுக்காக போட்டியிடுகிறது.
பிரான்ஸ்,
பாயல் கபாடியாவின் இயக்கத்தில், கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" திரைப்படம், 30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதன்மைப் போட்டிப் பிரிவில் கேன்ஸ் பாம் டி'ஓர் விருதுக்காக போட்டியிடும் முதல் இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது. உலகளவில் பிரபலமான பெரும் படைப்பாளிகளான பிரான்ஸ் போர்டு கப்போலா மற்றும் டேவிட் ரோஹன் ஆகியோரின் படைப்புகளுடன் இப்படம் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடதக்கது.
இப்படத்தில் கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, சாயா கதம் என விருது பெற்ற நடிகர்களுடன் கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, பிருந்தா மாஸ்டரின் தமிழ் படமான தக்ஸ் திரைப்படத்தில், ஹிருது ஹாரூன் நாயகனாக நடித்திருந்தார். மேலும் விஜய் சேதுபதி நடிப்பில், சந்தோஷ் சிவன் இயக்கிய மும்பைக்கார் படத்திலும், அமேசான் வெப் சீரிஸ் கிராஷ் கோர்ஸிலும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்போது பாயல் கபாடியாவின் இயக்கத்தில், இவரது நடிப்பில் உருவாகியுள்ள "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" படத்தின் டிரெய்லர், சர்வதேச அரங்கில் பெரும் பாராட்டுகளைக் குவித்து கவனம் ஈர்த்து வருகிறது.
வரும் 25 ம் தேதி கேன்ஸ் விருது அறிவிக்கப்படவுள்ளது. உலகம் முழுக்க திரையுலக படைப்பாளிகளால் கொண்டாடப்படும் கேன்ஸ் விருதான கேன்ஸ் பாம் டி'ஓர் 2024 விருதுக்காக இந்த முறை ஒரு இந்தியப்படம் போட்டியிடுவதால், இந்தியா முழுவதும் உள்ள படைப்பாளிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.