வாரிசு விமர்சனத்தால் ஜான்வி கபூர் கவலை
|வாரிசு விமர்சனத்தால் மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி நெருக்கடிக்கு ஆளாகி வருத்தம் அடைந்ததாக அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்தியில் வாரிசு நடிகர், நடிகைகள் ஆதிக்கம் உள்ளது என்றும், அவர்களுக்கே படங்களில் நடிக்க வாய்ப்புகள் அளிக்கிறார்கள் என்றும் விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரும் இந்த விமர்சனத்தில் சிக்கி உள்ளார். இதுகுறித்து ஜான்வி கபூர் அளித்துள்ள பேட்டியில், "திரையுலகில் வாரிசு நடிகைகள் மீது வெறுப்பு காட்டுகிறார்கள். இந்தி பட உலகில் தர்மா புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோகர் வாரிசு நடிகைகளை அறிமுகப்படுத்தி வருகிறார். என்னையும் தடக் படம் மூலம் அவர்தான் அறிமுகப்படுத்தினார். இதுதான் என்னை கேலி செய்வதற்கு காரணமாக அமைந்துவிட்டது. தர்மா புரொடக்ஷன்ஸ் என்னை வெறுப்பவர்களுக்கு ஒரு வழி அமைத்து கொடுத்துவிட்டது. காரணம் அந்த பட நிறுவனம்தான் வாரிசு நடிகர்களை அறிமுகம் செய்து வருகிறது. என் மீது வாரிசு நடிகை என்று வைக்கப்படும் விமர்சனங்களால் நான் நெருக்கடிக்கு ஆளாகி வருத்தம் அடைந்தேன். ஆனாலும் கரண் ஜோகரின் பட நிறுவனம் பல வித்தியாசமான, தரமான படங்களை எடுத்து வெளியிடுகிறது. அவரது கம்பெனி படத்தில் நடித்ததை நான் பெரிய அதிர்ஷ்டமாகவே நினைக்கிறேன்'' என்றார்.