திருமணம் நடைபெற உள்ளதாக பரவிய வதந்தி - காட்டமான ஜான்வி கபூர்
|ஜான்வி கபூருக்கு திருப்பதியில் திருமணம் நடைபெற உள்ளதாக வதந்தி பரவியது.
மும்பை,
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு படமொன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். அடுத்து தமிழ் படங்களில் நடிக்கவும் கதை கேட்கிறார்.
ஜான்வி கபூர் மராட்டிய மாநில முன்னாள் முதல்வர் சுசில் குமார் ஷிண்டே பேரன் சிக்கரை காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் பரவின. இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களும் வெளியானது.
இந்த நிலையில் ஒரு ரசிகர் வலைத்தளத்தில், ''ஜான்வி கபூருக்கு திருப்பதியில் திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்தில் தங்க நிற ஜரிகையில் பட்டுப்புடவையை அணிந்து கொள்ள இருக்கிறார். இந்த திருமணம் ரகசியமாக நடக்க இருக்கிறது'' என்று குறிப்பிட்டு இருந்தார். இது பரபரப்பானது.
இதனை பார்த்து காட்டமான ஜான்வி கபூர் ரசிகர்களை பார்த்து 'இதற்கு பதில் அளித்து ஏதாவது எழுதுகிறீர்களா?' என்று கேட்டு பதிவிட்டார். உடனே ரசிகர்கள் உங்களுக்கே தெரியாமலே நீங்கள் திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்களா? என்று ஜாலியாக கூறினர்.
இன்னும் சிலர் நீங்கள் திருமணம் செய்து கொள்ளும் வரை உங்களை அமைதியாக இருக்க விட மாட்டார்கள்போல் இருக்கிறது என்று பதிவிட்டனர்.