'ஜமா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
|தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம் போன்றவற்றை தெரிவிக்கும் விதமாக 'ஜமா' திரைப்படம் உருவாகியுள்ளது.
சென்னை,
'கூழாங்கல்' திரைப்படத்தை உருவாக்கிய லெர்ன் அண்ட் டெக் புரோடக்சன் நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து 'ஜமா' என்ற மற்றொரு யதார்த்தமான படத்துடன் சினிமா ரசிகர்களை கவரத் தயாராக உள்ளது. பாரி இளவழகன் இந்தப் படத்தை இயக்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் அழகியல் கலாச்சாரமான தெருக்கூத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளதாக அவர் கூறுகிறார். 'ஜமா' என்ற தலைப்பு தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கிறது. இந்தக் கதை அவர்களின் அனுபவங்களை மையமாகக் கொண்டு திருவண்ணாமலையில் நடந்ததாக படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நாடகத்தின் போது ஆண் கலைஞர்கள் இந்தக் கலைக்காக பெண் வேடமிடும்போது, அவர்கள் அனுபவிக்கும் உணர்ச்சி, மனதின் மாற்றங்கள் மற்றும் சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இந்தப் படம் விவரிக்கிறது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் சில இடங்களில் தெருக்கூத்தின் கலாச்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது.
பிரபல தெருக்கூத்து கலைஞர் கலைமாமணி தாங்கல் சேகர் நடிகர்களுக்கு தெருக்கூத்து பயிற்சி அளித்தார். இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா பாடல்களில் மிகைப்படுத்தலை தவிர்த்து, உண்மையான தெருக்கூத்து இசையைப் பயன்படுத்தியதால் படம் இயல்பாக வந்துள்ளது. 'அவதாரம்' படத்திற்குப் பிறகு இந்த வகையான இசையை அவர் மீண்டும் தேர்வு செய்துள்ளார்.
அம்மு அபிராமி, சேத்தன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.கோபால கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். பார்த்தா எம்.ஏ. படத்தொகுப்பாளராகவும், ஸ்ரீகாந்த் கோபால் கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.