அனைத்து சாதனைகளையும் தகர்த்த ஜெயிலர்...! முதல் நாள் வசூல் என்ன...?
|கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஒரு தமிழ் படம் இவ்வளவு பெரிய வரவேற்பைப் பெறுவது இதுவே முதல் முறை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன
சென்னை,
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.
தமிழகத்தை பொறுத்தவரை 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் 3500-க்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் வெளியானது.
இப்படத்தில் தென்னிந்திய முன்னணி நடிகர்களான மோகன்லால், சுனில், சிவராஜ் குமார் ஆகியோர் நடித்து உள்ளனர். மேலும் ஜாக்கி ஷெராப், தமன்னா, யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து இந்த படம் உருவாகி உள்ளது. ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில், முதல் நாளில் இந்தப்படம் ரூ.100 கோடி வரை வசூல் செய்திருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ச்சியாக படத்திற்கு குவிந்து வரும் நல்ல விமர்சனத்தால் அடுத்தடுத்த நாட்களில் 'ஜெயிலர்' படம் மேலும் பல சாதனைகளை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரம்ப மதிப்பீடுகளின் அடிப்படையில், படம் சுமார் ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் இன்னும் வரவில்லை.
முதல்நாளில் தமிழகத்தில் ரூ.29.46 கோடியையும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ.12.04 கோடியையையும் கர்நாடகத்தில் ரூ.11.92 கோடியும், கேரளத்தில் ரூ.5.38 கோடியும், வெளிநாடுகளில் ரூ.32.75 கோடி என ஒட்டுமொத்தமாக உலகளவில் இப்படம் ரூ.95.78 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஒரு தமிழ் படம் இவ்வளவு பெரிய வரவேற்பைப் பெறுவது இதுவே முதல் முறை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.