ஜெய்பீம் பட வழக்கு - விரைந்து விசாரணை நடத்தி இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம்
|விரைந்து விசாரணை நடத்தி மூன்று மாதத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினார்
சென்னை ,
சூர்யா நடிப்பில் வெளியான 'ஜெய்பீம்' படத்தின் இயக்குனர் ஞானவேல், நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான '2 டி' எண்டர்டைன்மென்ட்ஸ் மற்றும் படக் குழுவினர் மீது, சென்னை சாஸ்திரி நகர் போலீசார் காப்புரிமைச் சட்டத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்தனர்.
உண்மை சம்பவத்தின் அடிப்படையில் 'ஜெய்பீம்' படம் எடுக்கப்பட்ட நிலையில், காவல்துறை சித்ரவதையில் கொல்லப்பட்ட ராஜாக்கண்ணுவின் உறவினரும், அந்த வழக்கில் பாதிக்கப்பட்டவருமான கொளஞ்சியப்பன் என்பவர் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தங்களது வாழ்க்கையின் உண்மை சம்பவத்தை, தங்கள் அனுமதி இல்லாமல் திரைப்படமாக்கியதாகவும், காப்புரிமைச் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜாக்கண்ணுவின் உறவினர் கொளஞ்சியப்பன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி, விரைந்து விசாரணை நடத்தி மூன்று மாதத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும், வழக்கை செப்டம்பர் 15 -ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.