ஜெய் நடித்துள்ள 'எண்ணித்துணிக' படத்தின் அப்டேட்..!
|நடிகர் ஜெய் நடித்துள்ள 'எண்ணித்துணிக' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
அறிமுக இயக்குனர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்துள்ள திரைப்படம் 'எண்ணித்துணிக'. இந்த படத்தில் நடிகை அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். 'கேப்மாரி' திரைப்படத்துக்குப் பிறகு அதுல்யா மீண்டும் இந்த படத்தில் ஜெய்யுடன் இணைந்து நடித்துள்ளார். ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் வம்சி கிருஷ்ணா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் வைபவின் சகோதரர் சுனில் ரெட்டி, அஞ்சலி நாயர் ஆகியோர் நடித்துள்ளனர். சர்வதேச மாஃபியா கும்பலிடம் ஜெய் போன்ற ஒரு சாதாரண மனிதன் எப்படி சிக்குகிறான் என்பது பற்றிய கதையாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. படத்தின் பாடல் காட்சிகளுக்காக சென்னை, மதுரை மற்றும் வடகிழக்கு மேகாலயா உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
ரெயின் ஆஃப் ஆரோஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் கடந்த ஆண்டு நிறைவடைந்தன. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 'எண்ணித்துணிக' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 4-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.