நடிகர்களை தலைவர் என்று கூறுவது வருத்தமளிக்கிறது - இயக்குனர் வெற்றிமாறன்
|நாம் கதாநாயகர்களை, கதாநாயக பிம்பங்களை கொண்டாடுபவர்கள். எப்போதும் நாம் அப்படி தான் இருந்திருக்கிறோம். இன்றும் அப்படி தான் இருக்கிறோம்.
திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவர் தற்போது நடிகர் சூரி நடிப்பில் 'விடுதலை' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து சூர்யா நடிப்பில் 'வாடிவாசல்' படத்தை இயக்கவுள்ளார்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் நடிகர்களை தலைவர்கள் என்று கூறுவது வருத்தமளிக்கிறது என்று கூறியுள்ளார். அவர் பேசியதாவது, "எம்.ஜி.ஆர் அளவிற்கு எந்த ஒரு நடிகருக்கும் ரசிகர்கள் இல்லை என்று கூறுவார்கள். அவருக்கு முன்னாடி இருந்தவர்களும் அப்படி தான் இருந்தார்கள். நாம் கதாநாயகர்களை, கதாநாயக பிம்பங்களை கொண்டாடுபவர்கள். எப்போதும் நாம் அப்படி தான் இருந்திருக்கிறோம். இன்றும் அப்படி தான் இருக்கிறோம்.
நடிகர்களை தலைவர் என்று கூறுவது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது. முன்னாடி இருந்த நடிகர்கள் அரசியலிலும் சம்பந்தப்பட்டவர்களாக இருந்தார்கள் அதனால் அவர்களை அவ்வாறு சொல்வது சரியாக இருந்தது. இன்னைக்கு இருக்கும் நடிகர்களை அப்படி சொல்வது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது என்று கூறினார்.