18 வருடங்களுக்கு முன் நான் ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகமான நாள்... நடிகர் விஷால் நெகிழ்ச்சி பதிவு..!
|சண்டக்கோழி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான 'சண்டக்கோழி' திரைப்படம் இவரை ஆக்ஷன் ஹீரோவாக திரையுலகில் அறிமுகம் செய்தது. இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றியை பதிவு செய்தது.
இந்த படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையை தற்போதுவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த படம் விஷால், லிங்குசாமி, யுவன் ஷங்கர் ராஜா ஆகிய 3 பேருக்கும் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில் சண்டக்கோழி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த படம் குறித்து நடிகர் விஷால் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
அவர் அந்த பதிவில், '18 ஆண்டுகளுக்கு முன் 2005ம் ஆண்டு டிசம்பர் 16ந் தேதி தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக என்னை உருவாக்கி 'சண்டக்கோழி' திரைப்படம் வெள்ளித்திரையில் செய்த மாயாஜாலங்கள் குறித்து நான் அனுபவிக்கும் உணர்வுகளை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
அன்று தொடங்கி இன்று வரை நான் திரும்பி பார்க்காததற்கு ஒரே காரணம் ஒரு பார்வையாளனாக இருந்த என் மீது, நீங்கள் பொழிந்த அன்பும் பாசமும் இன்று வரை தொடர்வதுதான். என்னை நம்பிய என் பெற்றோர் என் இயக்குனர் லிங்குசாமி மற்றும் எனக்கும் மேலே உள்ள கடவுளுக்கும் நான் வணங்கி நன்றி கூறுகிறேன்.
இறுதியாக உலகளவில் பார்வையாளர்களாக என்னை பார்க்கும் கடவுள்களுக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். எனது தந்தை ஜி.கே.ரெட்டி மற்றும் எனது குரு அர்ஜுன் உங்கள் இருவருக்கும் நான் எப்போதும் கடமைப்பட்டு உள்ளேன். நன்றி மட்டும் போதாது என்பது எனக்குத் தெரியும். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்' என்று பதிவிட்டுள்ளார்.