அரசியல் படம் எடுக்க துணிச்சல் வேண்டும் - டைரக்டர் பேட்டி
|வைபவ்-அனகா முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘பபூன்’, அரசியலை கதைக்களமாக கொண்ட படம். இந்த படத்தைப் பற்றி அதன் டைரக்டர் அசோக் வீரப்பன் கூறியதாவது:-
"தமிழ் பட உலகில் எப்போதாவது ஒரு அரசியல் கதையம்சம் உள்ள படம் வரும். அரசியல் கதை சொல்ல துணிச்சல் வேண்டும். திரைக்கு வரயிருக்கும் பபூன், அதிரடியான அரசியல் படம். கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம், ஜெயராமன் ஆகியோர் தயாரித்துள்ளனர். பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி ஆகிய படங்களில் கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நான், இந்த படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமாகிறேன்.
மேடை நாடகங்களில் வரும் பபூனின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்வியலையும் படம் பேசும். தலைப்பை பார்த்து இது நகைச்சுவை படமாக இருக்குமோ என்று கருத வேண்டாம். இது, அதிரடியான அரசியல் படம்.
ஆலங்குடி இளையராஜா, அனகா, மதுரை எம்.பி.விஸ்வநாதன், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். காரைக்குடி, ராமேசுவரம், கொல்லம், சென்னை ஆகிய இடங்களில் படம் வளர்ந்துள்ளது."
இவ்வாறு அவர் கூறினார்.