எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம்... திருமணம் குறித்து நடிகை தமன்னா அளித்த பதில்
|நடிகை தமன்னா விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமன்னா 16 வயதிலேயே சினிமாவுக்கு வந்து பிரபல நடிகையாக உயர்ந்தார். கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், தனுஷ் என முன்னணி நடிகர்களோடு நடித்தார். தற்போது ரஜினிகாந்த் உடன் 'ஜெயிலர்' படத்திலும் நடித்துள்ளார்.
'ஜெயிலர்' படத்தில் தமன்னா ஆடிய காவாலா பாடல் சமீபத்தில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. முன்னதாக நடிகை தமன்னா மற்றும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மா இடையே காதல் என பேசப்பட்டது. பின்னர் கிசுகிசுக்கப்பட்ட காதல் விவகாரத்தை தமன்னாவே உறுதி செய்து அறிவித்தார்.
இந்நிலையில் திருமணம் குறித்த தமன்னாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 'சினிமாவில் நடிக்க வந்தபோது பத்து ஆண்டுகள் மட்டும் நடித்துவிட்டு, முப்பது வயதில் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால் தொடர்ந்து படம், வெப் சீரிஸ் என வாய்ப்புகள் வந்துகொண்டு இருக்கிறது. என்னால் நடிப்பை விட முடியவில்லை.
திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றால் அதற்கு சில முக்கிய பொறுப்புகள் உள்ளது. அந்த பொறுப்புகளுக்கு நான் தயாராகும்போது நான் திருமணம் செய்துகொள்வேன். எனது திருமணம் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். அதற்கான நேரம் நெருங்கி வருவதாக நினைக்கிறன்' என்று தெரிவித்துள்ளார்.