< Back
சினிமா செய்திகள்
துணிவு-வாரிசு ரசிகர்கள் காட்சி உண்டா...! விஜய்-அஜித் ரசிகர்கள் ஏமாற்றம்...!
சினிமா செய்திகள்

துணிவு-வாரிசு ரசிகர்கள் காட்சி உண்டா...! விஜய்-அஜித் ரசிகர்கள் ஏமாற்றம்...!

தினத்தந்தி
|
6 Jan 2023 4:16 PM IST

பொதுவாக விஜய்-அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானால் ரசிகர்கள் காட்சிகள் நள்ளிரவு 1 மணிக்கும் 4 மணிக்கும் நடைபெறும்.

சென்னை

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய், அஜித் ஆகியோர் தங்களது படங்கள் பொங்கலுக்கு வெளியாகும் என 3 மாதங்களுக்கு முன்பே அறிவித்தாலும், படங்களின் ரிலீஸ் தேதி சஸ்பென்ஸாகவே வைக்கப்பட்டு இருந்தது. இரண்டு படங்களின் டிரைலர்களிலும் குறிப்பிடப்படாத ரிலீஸ் தேதி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதன்படி ஜனவரி 11-ம் தேதி துணிவும், வாரிசும் மோதுகின்றன. படம் வெளியாக இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், இரண்டு படங்களின் முன்பதிவு இன்னும் இரண்டு நாட்களில் தொடங்க உள்ள நிலையில், பேச்சு அனைத்தும் வாரிசு மற்றும் துணிவு பற்றி தான்.

விஜய், அஜித் திரைப்படங்கள் 8 ஆண்டுகள் கழித்து ஒரே நாளில் வெளியாவதால் அவர்கள் ரசிகர்கள் மத்தியில் கடும் போட்டி எழந்துள்ளது. சமூக வலைத்தளம் போஸ்டர் என பல்வேறு வகையில் தங்களுடைய போட்டியை இரு ரசிகர்களும் காண்பித்து வருகின்றனர். இதனால் எந்த படம் வெற்றியடையும் என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த திரையுலகிலும் நிலவி வருகிறது.

பொதுவாக விஜய்-அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானால் ரசிகர்கள் காட்சிகள் நள்ளிரவு 1 மணிக்கும் 4 மணிக்கும் நடைபெறும்.இந்த ரசிகர் காட்சியை பார்க்க ஆயிரக்கணக்கில் செலவு செய்து டிக்கெட் வாங்கவும் தயங்காத தீவிர ரசிகர்கள் விஜய் மற்றும் அஜித்திற்கு உள்ளனர்.

அத்தகைய ரசிகர்களுக்கு தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. அதாவது ரசிகர்களின் காட்சிகளும் அதிகாலை காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாக சினிமா வட்டாரங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இரண்டு படங்களின் முதல் காட்சியும் காலை எட்டு மணிக்கு மட்டுமே திரையிடப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.

ஏற்கனவே எலியும், பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கும் விஜய், அஜித் ரசிகர்கள் ஒரே நேரத்தில் தியேட்டருக்கு வந்து படத்தைப் பார்க்க வந்தால் மோதல் ஏற்படும் வாய்ப்பை கருத்தில் கொண்டு தியேட்டர் நிர்வாகங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சில மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் இந்தப் படங்களை வெளியிட போலீஸ் பாதுகாப்பு கேட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இரண்டு திரைப்படங்களும் தலா 480 திரையரங்குகளில் வெளியானாலும், சிறப்பு காட்சிகளை தனித்தனி நேரத்தில் திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர். உதாரணத்திற்கு வாரிசு திரைப்படத்தை இரவு 1 மணிக்கு அனைத்து திரையரங்களிலும் திரையிட்டால், 4 மணிக்கு துணிவு திரைப்படத்தை அனைத்து திரையரங்களிலும் திரையிடலாம் என தெரிவிக்கின்றனர். இதன் மூலம் வசூலும் அதிக அளவில் இருக்கும். அதே சமயம் விஜய் அஜித் ரசிகர்களுக்கு மத்தியில் பிரச்சனை ஏற்படாமலும் பார்த்துக் கொள்ளலாம் என திரையரங்கு உரிமையாளர்கள் எண்ணுகின்றனர்.

மேலும் செய்திகள்