நல்ல மணப்பெண்ணுக்காக காத்திருக்கிறேன் - நடிகர் சிம்பு
|நல்ல மணப்பெண் அமைய காத்து இருப்பதில் தவறு இல்லை. நல்ல மணப்பெண்ணுக்காக காத்து இருக்கிறேன் என்று நடிகர் சிம்பு கூறினார்.
நடிகர் சிம்பு சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
"வித்தியாசமான கதைகளில் நடிக்க விரும்புகிறேன். மாநாடு படம் அந்த முயற்சியில் வந்து வெற்றியும் பெற்றது. மாநாடு படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவும் வாய்ப்பு உள்ளது. அதுபோல் இன்னொரு மாறுபட்ட கதை அம்சத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் நான் நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படம் தயாராகி உள்ளது. இது உண்மை சம்பவம் கதை. சினிமாத்தனமாக இல்லாமல் யதார்த்தமான படமாக இருக்கும். இதில் 3 தோற்றங்களில் வருகிறேன். 19 வயது இளைஞனாகவும் என்னை உருமாற்றி நடித்துள்ளேன். ரசிகர்களுக்கு பிடித்த அம்சங்கள் படத்தில் உள்ளன. இது வெற்றி பெற்றால் 2-ம் பாகமும் வரும். சிறிய படங்கள் ஓடுகின்றன. ஆனால் அதிக செலவில் எடுத்த படங்கள் தோல்வி அடைகின்றன.
ரசிகர்கள் வித்தியாசமான படங்களை பார்க்க விரும்புவதையே இது காட்டுகிறது. எனக்கு பிரச்சினை வந்தால் சிலர் வராமல் இருக்கலாம். ஆனால் நான் எல்லோருக்கும் ஆதரவாகவே இருப்பேன். அது என் பழக்கம். ஒரு படத்தில் பல கதாநாயகர்கள் நடிப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் படத்துக்கு மேலும் வரவேற்பு கிடைக்கும். ரஜினி, அஜித்குமார், விஜய் என்று யாருடன் வேண்டுமானாலும் இணைந்து நடிக்க நான் தயாராக இருக்கிறேன். எனது திருமணம் குறித்து யோசித்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அது நடக்கிற நேரத்தில் நடக்கும். நிறைய 2-வது, 3-வது திருமணங்கள் நடக்கின்றன. சிலர் காதலித்து விட்டு பிறகு பிரிகிறார்கள். விவாகரத்துகளும் நடக்கின்றன. இதில் யாரையும் குற்றம் சொல்ல முடியாது. எனவே இதுமாதிரி பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க நல்ல மணப்பெண் அமைய காத்து இருப்பதில் தவறு இல்லை. நல்ல மணப்பெண்ணுக்காக காத்து இருக்கிறேன். ஒரு படத்தை முடித்த பிறகுதான் அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன். முத்த காட்சிகள், புகைப்பிடிக்கும் காட்சிகள், நெருக்கமான காட்சிகள் போன்றவற்றை எனது படங்களில் திணிக்க கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். விரைவில் படம் டைரக்டு செய்வேன். இதற்காக 10 கதைகள் தயார் செய்து வைத்துள்ளேன்".
இவ்வாறு சிம்பு கூறினார்.