< Back
சினிமா செய்திகள்
படமாகிறதா சச்சினின் வாழ்க்கை...? புதிய அறிவிப்பை வெளியிட்ட கவுதம் மேனன்...!
சினிமா செய்திகள்

படமாகிறதா சச்சினின் வாழ்க்கை...? புதிய அறிவிப்பை வெளியிட்ட கவுதம் மேனன்...!

தினத்தந்தி
|
16 Nov 2023 3:51 PM IST

நேற்று உலகக்கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தின் தொலைக்காட்சி நேரலையில் இயக்குனர் கவுதம் மேனன் கலந்துகொண்டார்.

மும்பை,

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக ரிது வர்மா நடித்துள்ளார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. பல சிக்கல்களை தாண்டி இந்த திரைப்படம் வருகிற 24-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் படத்தின் புரோமோஷன் பணிகளை இயக்குனர் கவுதம் மேனன் தொடங்கியுள்ளார். அந்தவகையில் நேற்று இந்தியா - நியூசிலாந்து இடையே நடந்த உலகக்கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தின் தொலைக்காட்சி நேரலையில் கவுதம் மேனன் கலந்துகொண்டார்.

அந்த நேரலையில் வர்ணனையாளர் ஆர்.ஜே.பாலாஜியின் நகைச்சுவையான கேள்விகளுக்கு கவுதம் மேனன் பதிலளித்து கொண்டிருந்தார். அப்போது ஆர்.ஜே.பாலாஜி 'கிரிக்கெட்டை மையமாக வைத்து படம் இயக்க வாய்ப்பு உள்ளதா..?' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கவுதம் மேனன், 'கிரிக்கெட்டை மையமாக கொண்டு புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறேன். அதற்கான கதை எழுதும் பணியை துவங்கி உள்ளேன். அந்த கதை இரண்டு நண்பர்கள் மாவட்ட அளவிலிருந்து மாநில அளவில் எப்படி கிரிக்கெட்டில் உயர்கிறார்கள் என்பது பற்றி இருக்கும். சச்சின் மற்றும் வினோத் காம்ப்ளி இருவரது நட்பை அடிப்படையாக கொண்டு அந்த கதையை தயாரித்து வருகிறேன்' என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்