அடுத்த வருடம் இந்த பண்டிகைக்கு வெளியாகிறதா 'பிரேமலு 2'?
|பிரேமலு படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, 2-ம் பாகத்தை படக்குழு அறிவித்தது
திருவனந்தபுரம்,
இந்த ஆண்டின் மிகப்பெரிய லாபம் ஈட்டிய படமாக நட்சத்திரங்கள் இல்லாத 'பிரேமலு' உள்ளது. காதல், நகைச்சுவை கதைக்களத்தில் உருவான இப்படம் உலகளவில் ரூ.136 கோடி வசூல் செய்து, இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த இந்தியப் படங்களில் ஒன்றாக உள்ளது. இந்த வசூல் பெரிதாக தெரியவில்லை என்றாலும், படத்தில் எந்த ஒரு நட்சத்திரங்களும் இல்லாமல், புதுமுகங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.
வெறும் 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் அதன் பட்ஜெட்டை விட 45 மடங்கு அதிக லாபத்தை பெற்றிருக்கிறது. இது 4,500 சதவீதம் ஆகும். கிரிஷ் ஏ.டி இயக்கிய இப்படத்தில் நஸ்லென் மற்றும் மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். தற்போது இப்படம் ஆஹா ஓ.டி.டி தளத்தில் தெலுங்கிலும், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தமிழ், மலையாளம் மற்றும் இந்தியில் உள்ளது.
இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, 2-ம் பாகத்தை படக்குழு அறிவித்தது. அதனுடன் இப்படம் அடுத்த வருடம் வெளியாகும் என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில், பிரேமலு 2 குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கும் என்றும் அடுத்த ஓணம் பண்டிகையையொட்டி பிரேமலு 2 வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்கப்படுகிறது.