மீண்டும் படப்பிடிப்பா? 'பொன்னியின் செல்வன்' பட வதந்திக்கு விளக்கம்
|மீண்டும் படப்பிடிப்பை நடத்தும் திட்டம் இல்லை என்றும் எடுத்த காட்சிகள் அனைவருக்கும் திருப்தி அளிப்பதாக உள்ளது என்றும் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை சில மாதங்களுக்கு முன்பே முடித்து கிராபிக்ஸ், பின்னணி இசைகோர்ப்பு உள்ளிட்ட தொழில் நுட்ப பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் படத்துக்கு இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரகுமான் சில காட்சிகள் திருப்தியாக இல்லை என்று கூறியதாகவும் இதையடுத்து அந்த காட்சிகளை நீக்கி விட்டு மீண்டும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை நடத்த மணிரத்னம் திட்டமிட்டு இருப்பதாகவும் இணையதளங்களில் தகவல் பரவியது.
ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்துக்காக வளர்த்த நீண்ட தலைமுடியை நடிகர்கள் எடுத்து விட்டு வேறு படங்களில் நடிக்க தொடங்கி உள்ள நிலையில் மீண்டும் படப்பிடிப்பை நடத்துவது சாத்தியமா என்றும் கேள்விகள் எழும்பின. இந்த நிலையில் இணையதங்களில் பரவி உள்ள தகவல் உண்மை இல்லை என்றும் மீண்டும் படப்பிடிப்பை நடத்தும் திட்டம் இல்லை என்றும் எடுத்த காட்சிகள் அனைவருக்கும் திருப்தி அளிப்பதாக உள்ளது என்றும் படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர். பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் இந்த வருட இறுதியில் திரைக்கு வர உள்ளது.