கீர்த்தி சுரேஷ் திருமண வதந்திக்கு விளக்கம்
|திருமணம் குறித்த வதந்திக்கு விளக்கமளித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா.
நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து அவ்வப்போது கிசுகிசுக்கள் வந்தவண்ணம் உள்ளன.
சில தினங்களுக்கு முன்பு அவரது திருமணம் குறித்து புதிய தகவல் வலைத்தளத்தில் பரவியது. அதில் கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி காலத்து நண்பரை காதலிப்பதாகவும், கடந்த 10 வருடங்களாக இந்த காதலை தொடர்வதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இவர்கள் காதலை இரு வீட்டு பெற்றோர்களும் ஏற்றுகொண்டு விட்டனர் என்றும், அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தகவலை கீர்த்தி சுரேஷ் தரப்பில் அவரது தாயாரும், நடிகையுமான மேனகா மறுத்துள்ளார்.
அவர் கூறும்போது, "திருமணம் குறித்து வெளியான தகவல் பொய்யானது. பரபரப்புக்காக இதை செய்கிறார்கள். இது தொடர்பாக பேச எதுவும் இல்லை" என்றார்.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சாணி காயிதம் படம் சமீபத்தில் வந்தது. உதயநிதியுடன் மாமன்னன், தெலுங்கில் நானியுடன் தசரா படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன.