'கல்கி 2898 ஏ.டி.' : சிறப்பு கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ்?
|நடிகை கீர்த்தி சுரேஷ் கல்கி 2898 ஏ.டி படத்தில் சிறப்பு கதாபாத்திரம் ஒன்றிற்கு டப்பிங் பேசுவதாக கூறப்படுகிறது.
சென்னை,
நாக் அஸ்வின் இயக்கத்தில் ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'கல்கி 2898 ஏ.டி' படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். அறிவியல் சார்ந்த கதைக்களத்தில் தயாராகும் இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது.
இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் கல்கி 2898 ஏ.டி படத்தில் சிறப்பு கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதாகவும் தற்போது அதற்கு டப்பிங் பேசிவருவதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, இப்படத்தில் புஜ்ஜி என்ற கதாபாத்திரத்திற்கு கீர்த்தி சுரேஷ் டப்பிங் பேசுவதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. அதேபோல், பிரபாசின் கதாபாத்திரத்திற்கு மகேஷ் பாபு டப்பிங் பேசுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த எந்தவிதமான அதிகாரபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் கீர்த்திசுரேஷ். இந்தி திரையுலகிலும் தற்போது அறிமுகமாகியுள்ள கீர்த்தி சுரேஷ், அட்லி இயக்கத்தில் உருவாக இருக்கும் பேபி ஜான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இது தமிழில் விஜய் நடித்து வெளியான தெறி திரைப்படத்தின் ரீமேக் ஆகும் இப்படத்தில் வருண் தவான் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை அட்லி தயாரிக்கிறார்.