ஜெயம் ரவியுடன் நெருக்கமா? கெனிஷா பிரான்சிஸ் மறுப்பு
|ஜெயம் ரவியுடன் இருக்கும் நட்பு தொழில்முறை சார்ந்தது மட்டும்தான் என்று கெனிஷா கூறியுள்ளார்.
சென்னை,
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். கோர்ட்டில் விவாகரத்து வழக்கும் தொடர்ந்துள்ளார்.
இதற்கு பதில் அளித்த ஜெயம் ரவியின் மனைவி, "இது எனது கவனத்துக்கு வராமலும் எனது ஒப்புதல் இல்லாமலும் ஜெயம் ரவி தன்னிச்சையாக எடுத்த முடிவு என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஜெயம் ரவியும் பாடகி கெனிஷா பிரான்சிசும், நெருக்கமாக பழகுவதாகவும் இதனாலேயே மனைவியை பிரிய முடிவு செய்துள்ளார் என்றும் வலைத்தளத்தில் தகவல் பரவியது. ஆனால் கெனிஷா பிரான்சிஸ் குறித்து பரவிய செய்திகளுக்கு ஜெயம் ரவி மறுப்பு தெரிவித்திருந்தார்.
வாழு வாழ விடு, ஒரு பாடகியுடன் என்னை தொடர்புபடுத்தி பேசுகிறார்கள். இப்படி செய்யாதீர்கள். கெனிஷா 600 லைவ் ஷோக்களில் பாடியவர். தனது வாழ்க்கையில் கஷ்டப்பட்டு உயர்ந்தவர். அவர் ஒரு அங்கீகரிக்கப்பட்ட மனநல ஆலோசகர். நானும் அவரும் சேர்ந்து ஒரு ஹீலிங் மையம் தொடங்கப் போகிறோம். அதை கெடுக்காதீங்க, யாரும் கெடுக்க முடியாது என ஜெயம் ரவி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது கெனிஷா டிடி நெக்ஸ்ட் நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ஜெயம் ரவிக்கும் தனக்கும் இருக்கும் நட்பு என்பது தொழில்முறை சார்ந்தது மட்டும்தான். ஜெயம் ரவி என்னுடைய நண்பர். எனது வாடிக்கையாளர் அவ்வளவுதான். அவர்கள் விவாகரத்துக்கு நான் காரணம் என சொல்கிறார்கள். அது முற்றிலும் பொய். ஜெயம் ரவி அவரது மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பும் வரை அதுபற்றி எனக்கு தெரியாது. என்னை இந்த விவகாரத்தில் இழுக்காதீர்கள். எனக்கு நிறைய வேலை இருக்கிறது. அதற்கு நேரம் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக வேறு எந்த ஊடகத்திடமும் நான் பேசமாட்டேன். இவை என் கடைசி வார்த்தைகள் என்றார்.