எல்லா மாநிலங்களிலும் புழங்குவதற்கு இந்தி மொழியென்ன இந்தியக் கரன்சியா? - வைரமுத்து கேள்வி
|இந்தியாவை ஓர் ஒற்றை மொழிமட்டும் கட்டியாள முடியுமா என்று வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை,
கோவாவில் உள்ள தபோலிம் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படை வீரர்கள் (CISF), இந்தி மொழிதான் தேசிய மொழி என தமிழ்நாட்டு பெண் ஒருவரிடம் வாதிட்ட சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தி பேசாதவர் இந்தியர் இல்லை என்று அரசமைப்பில் இருக்கிறதா? இந்தியா என்ற நாடு இந்தி என்ற சொல்லடியில்தான் பிறந்ததா? எல்லா மாநிலங்களிலும் புழங்குவதற்கு இந்தி மொழியென்ன இந்தியக் கரன்சியா?
இந்தி பேசும் மாநிலங்களிலேயே இந்தி கல்லாதார் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? வடநாட்டுச் சகோதரர்கள் தமிழ்நாட்டுக்குள் வந்தால் தமிழ் தெரியுமா என்று தெள்ளு தமிழ் மக்கள் எள்ளியதுண்டா?
சிறுநாடுகளும்கூட ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்சிமொழிகளால் இயங்கும்போது இந்தியாவை ஓர் ஒற்றை மொழிமட்டும் கட்டியாள முடியுமா? 22 பட்டியல் மொழிகளும் ஆட்சிமொழி ஆவதுதான் வினாத் தொடுத்த காவலர்க்கும் விடைசொன்ன தமிழச்சிக்குமான ஒரே தீர்வு" என்று தெரிவித்து உள்ளார்.