அடுத்த மாதம் வெளியாகிறதா விக்ரமின் 'துருவ நட்சத்திரம்'?
|'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
சென்னை,
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் பணிகள் 2017-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. அதன் பிறகு ரிலீஸ் தேதி குறித்த எந்த ஒரு அப்டேட்டையும் படக்குழுவினர் தெரிவிக்கவில்லை.
தற்போது 'துருவ நட்சத்திரம்' எப்போது வெளியாகும் என ஆர்வத்தோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு ஒரு நல்ல தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
தற்போது மக்களவை தேர்தல் பணிகள் நடந்து வருவதால் எந்த ஒரு பெரிய நடிகர்களின் படங்களும் வெளியாகாமல் இருக்கின்றன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.