கங்குலி வாழ்க்கை கதையில் நடிக்கிறேனா? ரன்பீர் கபூர் விளக்கம்
|கங்குலி வாழ்க்கை கதையில் கங்குலி வேடத்தில் பிரபல இந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரன்பீர் கபூர் விளக்கம் அளித்துள்ளார்.
தோனி, சச்சின் தெண்டுல்கர், மிதாலி ராஜ் ஆகியோரை தொடர்ந்து கிரிக்கெட்டில் கலக்கிய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கையும் படமாக உள்ளது. மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஸ்ரீஜித் முகர்ஜி இந்த படத்தை இயக்க உள்ளார்.
படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதில் கங்குலி வேடத்தில் பிரபல இந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. சமீபத்தில் கங்குலியை, ரன்பீர் கபூர் சந்தித்து பேசியதை வைத்தும் இதை உறுதிப்படுத்தி பலரும் பேசினர்.
இதற்கிடையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரன்பீர் கபூரிடம், கங்குலி வாழ்க்கை படம் குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், கங்குலி இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடும் லெஜண்ட். அவரை பற்றிய வாழ்க்கை படம் எடுக்கப்படுவது மிகவும் சிறப்பானது. ஆனால் துரதிருஷ்டவசமாக நான் இந்த படத்தில் இடம்பெறவில்லை. எனக்காக காதல் கதைகளை தான் இயக்குனர்கள் எழுதி வருகிறார்கள் என நினைக்கிறேன்'' என்றார்.
இதன்மூலம் கங்குலி வாழ்க்கை படத்தில்தான் நடிக்கவில்லை என்பதை ரன்பீர் கபூர் உறுதிபடுத்தி இருக்கிறார். புதிய நடிகருக்கான தேர்வு மும்முரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.