தமிழ் படத்தில் தீபிகா படுகோனே?
|தீபிகா படுகோனே முதன்முறையாக நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் தீபிகா படுகோனே. இவர் இந்தியில் ரூ.20 கோடிவரை சம்பளம் வாங்குவதாக தகவல். ஷாருக்கான் ஜோடியாக தீபிகா படுகோனே நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த பதான் படம் பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது.
இதையடுத்து சம்பளத்தை மேலும் உயர்த்தும் முடிவில் இருக்கிறார். இந்த நிலையில் தீபிகா படுகோனேவை தமிழ் படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சிம்பு நடிக்கும் 48-வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாக கூறப்பட்டது.
இதில் கதாநாயகியாக நடிக்க முன்னணி நடிகைகள் பலர் பரிசீலிக்கப்பட்டனர். தற்போது தீபிகா படுகோனே பொருத்தமாக இருப்பார் என்று அவரிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் கசிந்துள்ளது. தீபிகா படுகோனே அதிக சம்பளம் கேட்பார் என்றும் அதை கொடுக்க படக்குழுவினர் சம்மதிப்பார்களா என்றும் சந்தேகங்களும் எழும்பி உள்ளன.
சிம்பு படத்தில் தீபிகா படுகோனே நடிப்பாரா? என்பது விரைவில் தெரியவரும். ஏற்கனவே ரஜினிகாந்தின் கோச்சடையான் அனிமேஷன் படத்தில் தீபிகா படுகோனே நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.