பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர் - நடிகை கிரண் புகார்
|பட வாய்ப்பு அளிக்க படுக்கைக்கு அழைத்தனர் என்று நடிகை கிரண் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழில் ஜெமினி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கிரண். வில்லன், திவான், பரசுராம், அரசு, வின்னர், தென்னவன், நியூ, நாளை நமதே, சகுனி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் சினிமாவில் எதிர்கொண்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து கிரண் அளித்துள்ள பேட்டியில், "நான் தென்னிந்திய படங்களில் நடித்து பிரபலமானதும் இந்திக்கு சென்றேன். அங்கு வரவேற்பு இல்லாததால் மீண்டும் சென்னைக்கே வந்து செட்டில் ஆனேன். சினிமாவில் எனக்கு நிறைய கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டன.
பட வாய்ப்பு அளிக்க படுக்கைக்கு அழைத்தனர். இதனால் மன அழுத்தம் ஏற்பட்டது. படத்தில் நடிக்க ஒப்பந்தம் போட்டதும் அவர்களது சுயரூபத்தை காட்டுவார்கள். இன்று இரவு வருகிறாயா.. இல்லையா? என்று சர்வ சாதாரணமாக கேட்பார்கள். உடனே அந்த படத்தில் இருந்து வெளியே வந்து விடுவேன்.
நடிப்பை விட்டு விலகி ஏதாவது வியாபாரம் செய்யலாமா? என்றும் நினைத்தேன். நான்கு வருடங்கள் ஒருவரை காதலித்து பிறகு அவர் நல்லவர் இல்லை என்று தெரிந்து காதலை முறித்து விட்டேன். இப்போது அனைத்து பிரச்சினைகளும் நீங்கி விட்டன. பட வாய்ப்புகளும் வருகின்றன. தற்போது யாரையும் காதலிக்கவில்லை. திருமணம் செய்து கொள்ளும் எண்ணமும் இல்லை'' என்றார்.