< Back
சினிமா செய்திகள்
நடிகை ரகுல் பிரீத் சிங்கின் தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் பற்றிய துருதுரு பேட்டி...
சினிமா செய்திகள்

நடிகை ரகுல் பிரீத் சிங்கின் தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் பற்றிய துருதுரு பேட்டி...

தினத்தந்தி
|
6 Oct 2022 11:15 AM IST

நடிகை ரகுல் பிரீத் சிங் தனது தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் பற்றி அளித்துள்ள துருதுரு பேட்டியை காணலாம்.


தமிழில் கார்த்தி ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை ரகுல் பிரீத் சிங். என்.ஜி.கே படத்தில் சூர்யாவுடன் நடித்து இருந்தார். என்னமோ ஏதோ, தேவ் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்த அவர் இந்தியிலும் தடம் பதித்து உள்ளார்.

டே டே பியார் டே டே என்ற படத்தில் நடிகர் அஜய் தேவ்கனுடன் இணைந்து நடித்து ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றார். படமும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இந்த ஜோடி மீண்டும், திகில் காட்சிகள் நிறைந்த ரன்வே 34 என்ற மற்றொரு படத்தில் கூட்டணி போட்டுள்ளது. அதில், நடிகர் அமிதாப் பச்சனும் நடித்துள்ளார். இந்தியில் அட்டாக், ரன்வே 34 மற்றும் கட்புட்லி ஆகியன இந்த ஆண்டில் அவரை உச்சத்திற்கு கொண்டு செல்லும் படங்களின் வரிசையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவரது படைப்புகள் ஓ.டி.டி. தளத்திலும், வெள்ளி திரையிலும் வெளிவந்து வெற்றி பெற்று அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளன. தனிப்பட்ட வாழ்க்கையிலும் நிலையான இடம் பிடித்து உற்சாகமுடன் காணப்படுகிறார்.

தொழில் மற்றும் வாழ்க்கை என இரண்டிலும் தடம் புரளாமல் பெரிய அளவில் வெற்றியை பெற்றுள்ள அவர், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பெற்ற அன்பு மற்றும் வெற்றி ஆகியவற்றை பற்றி சுவையான பேட்டியை அளித்துள்ளார்.




உங்களது தொழிலில் வெற்றி பயணம் மேற்கொள்கிறீர்கள்... கனவு நனவானது என உணருகிறீர்களா?

உண்மையில் எனக்கு கனவு நனவான தருணமே. பள்ளியில் நான் படித்தபோது, மாடலிங் மற்றும் நடிப்பு துறையில் சாதிக்க ஆசைப்பட்டேன். எனது பெற்றோரும் அதற்கு ஆதரவளித்தனர். உனது கனவை மெய்ப்பிக்க போராடு. உனக்கு நாங்கள் துணை நிற்போம் என அவர்கள் என்னிடம் கூறினர்.

உங்களது குழந்தைக்கு ஆதரவு காட்ட வேண்டியது என்பது முக்கியம் என அறிவுரையும் கூறுகிறார். அது ஓர் மென்மையான நெடிய பயணம். எல்லாவற்றையும் நானே கவனித்து கொண்டேன். அவை எல்லாவற்றிற்காகவும் நான் உச்சபட்ச பெருமை கொள்கிறேன் என கூறியுள்ளார்.

2011-ம் ஆண்டில் புது முகம், திறமையான நபர், அழகிய புன்னகை, அழகான கண்கள் மற்றும் மக்களின் தேர்வு என 5 பட்டங்களை தட்டி சென்றீர்கள். இதனால் பரவசம் அடைந்தீர்களா?

அதிக மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்தேன். ஆனால், மிக இளவயதில் கிடைத்த பெரிய விசயம் அது. இப்போது கூட, நடிகையாக பெரிய அளவில் சாதித்து விடவில்லை. விரும்பியவற்றை நான் செய்கிறேன்.

கேமிரா முன் நிற்க வேண்டும் என்பது எனது விருப்பம். தென்னிந்திய அல்லது பாலிவுட் நடிகையாக எனது கனவை நான் நிஜத்தில் வாழ்கிறேன். ஒவ்வொரு நாள் காலையிலும் கேமிராவை பார்க்க வேண்டும் என்பதே எனது ஆசை என கூறுகிறார்.

தென்னிந்திய நடிகையாக சாதித்த பின், பாலிவுட்டில் தடம் பதித்தது எளிமையானதா? அல்லது கடினம் வாய்ந்ததா?

எதுவுமே எளிதோ அல்லது கடினம் வாய்ந்ததோ இல்லை. நீங்கள் தொடர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும். உங்களை முன்னோக்கி தள்ள வேண்டும். மேம்படுத்தி கொண்டிருக்க வேண்டும். கடினம் என கூறுவதே, ஏதோ சாதிக்க முடியாத ஒன்றை கூறுவதுபோல் உள்ளது.

அதனை ஒரு சவாலாகவே நான் பார்க்கிறேன். கவனம் செலுத்தினால் முடியாதது என எதுவும் இல்லை. 40 படங்களில் நடித்தும் கூட, சாதிப்பதற்கு இன்னும் நிறைய உள்ளன என இன்னும் நான் நம்புகிறேன். இந்த புதிய தளம், புதிய வெளியை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறேன்.

மும்பையில் வாழ்க்கை எப்படி உள்ளது?

அழகு போட்டி நடந்த பின்னர், ஐதராபாத்துக்கு செல்வதற்கு முன் மும்பையில் 2, 3 வருடங்கள் வசித்தேன். தற்போது, மும்பையில் எனக்கு வீடு உள்ளது. எப்போதும் பணியாற்ற கூடிய நகரம். நானும் அதுபோன்றவளே. விடுமுறை நாளில் கூட உங்கள் மனம் ஓய்வில் இருக்காது. இது செய்ய வேண்டும். அது செய்ய வேண்டும் என்ற பரபரப்பு இருக்கும். மும்பை ஒரு கனவுகளின் நகரம் என கூறுகிறார்.






உடலை பிட்டாக வைத்திருப்பது பற்றி...

அதில் ஆர்வமுள்ளவள். ராணுவ பின்னணியில் வந்த நான், ஒரு நாளும் எனது பெற்றோர் காலை உடற்பயிற்சியை தவற விட்டு பார்த்ததே இல்லை. இளம் வயதில் விளையாட்டுகளில் ஆர்வம் நிறைந்தவள். உயர்நிலை பள்ளியில் படிக்கும்போது, தேசிய அளவிலான கோல்ப் வீராங்கனை நான்.

அதனால், வளரும்போதே நிறைய உடற்பயிற்சி விசயங்கள் என்னுடன் வந்தன. திரை துறைக்கு வந்த பின்னர் யோகா, கிக் பாக்சிங் போன்றவற்றில் ஈடுபடுகிறேன். எழுந்ததும், நடைப்பயிற்சி ஆகட்டும் அல்லது வலிமை தரும் பயிற்சி ஆகட்டும். வியர்வை வரும் வரை உடற்பயிற்சி செய்யவில்லை என்றால், இயல்பாக நான் உணர்வதில்லை. அன்றைய பொழுது தொடங்க 60 நிமிடங்களாவது சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டும்.

பொதுவாக மக்கள் சுறுசுறுப்படைய தேநீர் அல்லது காபி பருகுவார்கள். ஆனால், நான் உடற்பயிற்சி செய்வேன். அதன்பின்னர், என்னிடம் 20 மணிநேரம் வரை நீங்கள் வேலை வாங்கலாம். உடல் சார்ந்த பயிற்சி எடுத்து கொள்ளவில்லை என்றால், எனது ஹார்மோன்கள் சோர்ந்து விடும் என கூறுகிறார்.

(ரகுல் தனியாக 3 உடற்பயிற்சி கூடங்களை நடத்தி வருகிறார்.)

உணவு சாப்பிடுவதில் உங்களது ஆர்வம் பற்றி...

நான் தீவிர உணவு பிரியை. அதனால், கூடுதலாக சாப்பிட்டு விட்டால் சிறிது தூரம் நடந்து கொடுப்பேன். ஆனால், ஆரோக்கியமுடனேயே உள்ளேன். உண்மையில், தூய்மையான உணவை விரும்புபவள். கார்போஹைடிரேட்டுகள் மோசம் என மக்கள் கூறுகின்றனர். அது தவறு. மோசம் விளைவிக்கும் கார்போஹைடிரேட்டுகளையே தவிர்க்க வேண்டும். ஆயுர்வேதமும் நான் பின்பற்றுகிறேன். சரிவிகித உணவை சாப்பிடுபவள் நான். அசைவத்திற்கு பதில் சைவ பிரியை நான். பருப்பு, அரிசி சாதம், கூட்டு என வீட்டில் தயாரித்த உணவு பொருட்கள் மீது அதிக விருப்பம். சர்க்கரை மற்றும் பொறித்த பொருட்களையே எப்போதும் தவிர்த்து விடுவேன் என கூறுகிறார்.

நீங்கள் திரை துறையில் இருக்கும்போது அழுத்தம் தருவது போல் உணருகிறீர்களா...?

ஏன் அது அழுத்தம் தர போகிறது? நானே இதனை தேர்வு செய்தேன். நேர்மையாக கூற வேண்டுமென்றால், உங்களுக்கு நெருக்கடியான வேலை இல்லையென்றால், நீங்கள் பிசியாக இல்லை என உங்களுக்கு தோன்றினால், ஏதோ சரியாக இல்லை என உங்களுக்கே ஆச்சரியம் ஏற்படும். நான் அமைதியானவள். அதனையே விரும்புகிறேன். அதுவே என்னை மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கிறது. உங்களது மகிழ்ச்சி, முகத்திலும், தோலிலும் கூட வெளிப்படும். உங்களை அழகாக காட்டும். வேலை செய்வதில் நான் மகிழ்கிறேன் என கூறுகிறார்.

எப்படி ஓய்வை திட்டமிடுகிறீர்கள்?

வேலை செய்வதற்கும் கூடுதலாக, அதிகம் ஓய்வெடுக்க விரும்புவேன். பயணம் செய்வது எனது விருப்பம். ஆண்டொன்றுக்கு 10 இடங்களுக்கு செல்ல திட்டமிடுவேன். கடைசியில் ஓரிடத்திற்கு மட்டுமே செல்ல முடியும். ஆனால் அது சரியே. இது உழைக்கும் காலம். கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாம் அனைவருக்கும் அதிக ஓய்வு இருந்தது. ஆனால், புது வருடத்தில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் செலவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். நெருங்கியவர்களுடன் புது வருட வரவை எதிர்கொள்வது மகிழ்வு தரும்.

சமூக ஊடகங்களில் நீங்கள் பெறும் பரிசு என்னவாக இருக்கும்?

பெருந்தன்மை மிக்கவர்கள் மக்கள். பேரன்பை பெறுவதில் ஆசீர்வதிக்கப்பட்டவள் நான் என உணருகிறேன். தினசரி அன்பை பெறுவதில், நீங்கள் சிறப்பானவராக இருக்க வேண்டும். நான் ஒரு புகைப்படம் பதிவிடுவேன். அதற்கு எண்ணற்ற இதயங்கள் தென்படும். தொடர்ந்து புகைப்படங்களை வெளியிடுகிறேன். அந்த அன்பை பெறுவதில் தகுதியானவளாக உள்ளேன்.




உங்களை கலாய்ப்பது பற்றி?

ஒவ்வொருவரையும் கலாய்க்கிறார்கள். அது என்னை பாதிக்க நான் விடுவதில்லை. 100 சதவீதம் நேர்மையுடன் நான் கடமையை செய்கிறேன். நான் யாரென என்னை சுற்றியுள்ளவர்களுக்கு தெரியும். குடும்பத்தினரை பாதிக்காத வரையில், அது என்னையும் பாதிக்காது.

உங்களுடன் உறவில் இருப்பவர்களில் நேர்மையானவர் யார்?

அது, நான் எப்படிப்பட்டவள் என்பதனை சார்ந்தது. இரட்டை வாழ்க்கை வாழ விருப்பமில்லாதவள் நான். அது வேலையோ, தனிப்பட்ட விசயமோ. உங்களுக்கு பெற்றோர், சகோதர சகோதரிகள், நண்பர்கள் உள்ளனர். அதேபோன்று, ஆண் நண்பரும் கூட இருப்பார்கள். அதனை மறைக்க நான் விரும்பவில்லை? ஜாக்கி (பாக்னானி) மற்றும் நான் இருவரும் இதே எண்ணமுடையவர்கள். உங்களுக்குள் ஓர் உறவு உண்டெனில் அதற்கு நீங்கள் மதிப்பளிக்க வேண்டும். அது எனது வாழ்வின் ஒரு பகுதி என கூறி முடிக்கிறார்.

காதலை பற்றிய உங்களது பார்வை?

துரதிர்ஷ்டவசத்தில் காதல் தவறாக பயன்படுத்தப்படும் விசயம் ஆகி விட்டது. முன்பே குறிப்பிட்டதுபோல், முதலில் உங்களுக்குள் நீங்கள் முழுமையுடையவராக இருத்தல் வேண்டும். அதன்பின்பே, அன்பை கொடுக்கவோ அல்லது மற்றவரிடம் இருந்து பெறவோ முடியும்.

உண்மையில், காதலென்றால் என்னவென எனக்கு தெரியவில்லை. ஆனால், எது காதல் இல்லை என என்னால் கூற முடியும். நீங்கள் சரியென எதனை நினைக்கிறீர்களோ, அதனை மற்றவர்களை செய்ய வைப்பது, காதல் இல்லை. பாதுகாப்பற்ற முறையில் அல்லது பிறரை சார்ந்து இருப்பதோ இல்லை. ஒருவரையொருவர் மதிப்பதிலும், அவர்களின் பயணத்தில் அவர்கள் தொடர சுதந்திரமுடன் விடவேண்டும். ஒருவருடன் ஒருவர் ஒன்றாக வாழ வேண்டும்.

நீங்கள் இருவரும் ஒன்றாக என்ன செய்து மகிழ்கிறீர்கள்?

திரையுலகம், உணவு, பயணம் என இருவருக்கும் ஒரே மாதிரியான சுவையுள்ளது. நாங்கள் இருவரும், ஒருவருக்கொருவர் மாற்றங்களை கொண்டு வர விரும்புவதில்லை. எனது செயலை நான் செய்கிறேன். அவர், அவரது செயலை செய்கிறார். பணியை பற்றி கூட நாங்கள் ஆலோசிப்பதில்லை. பாதி நேரம் நாட்டிலேயே அவர் இருப்பதில்லை. ஆரோக்கியம் நிறைந்த ஓர் உறவுக்கு இடைவெளி என்பது அவசியம்.

திருமணம் எதுவும்...?

விரைவில் எதுவும் இல்லை. அப்படி நடக்கும்போது, உங்கள் அனைவருக்கும் அதனை தெரியப்படுத்துவேன். எங்களது உறவை பற்றி பேசியதற்காக திருமணத்திற்கு தயாராகி விட்டோம் என்று அர்த்தமில்லை. அதற்கு இன்னும் நேரம் உள்ளது. வேலை செய்வதிலேயே தற்போது எனது கவனம் உள்ளது.

உண்மையான ரகுல் எப்படிப்பட்டவர்?

நான் பெறுவனவற்றை 200 சதவீதம் திருப்பி கொடுக்க விரும்புபவள். கனவை துரத்தும், உணர்வுகளை பின்தொடரும் நபர். நான் இப்போது செய்வது எனது தொழில். அது நான் இல்லை. நான் மிக எளிமையானவள். மனதளவில் நானொரு குழந்தை. அந்த தருணத்தில் மகிழ்ச்சியாக இருக்க விரும்புபவள். பொருட்களை சேகரிப்பதற்கு பதில் நினைவுகளை சேகரிப்பதில் நம்பிக்கை கொண்டவள். புகைப்படங்கள் எடுக்கும் நேரத்தில், அதனை மனதில் படம் பிடித்து கொள்வதில் சுறுசுறுப்பானவள் என அவர் கூறியுள்ளார்.




மேலும் செய்திகள்