சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற "மஞ்சுமல் பாய்ஸ்" பட இயக்குனர்
|ரஷியாவில் நடைபெற்ற கினோபிராவோ சர்வதேச திரைப்பட விழாவில் "மஞ்சுமல் பாய்ஸ்" சிறந்த இசைக்கான விருதை பெற்றுள்ளது.
ரஷியா,
இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் 'மஞ்சுமல் பாய்ஸ்'. இப்படத்தில் நடிகர்கள் சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தனர். கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி வெளியான இப்படம் கேரளாவை விட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று அதிக வசூலைக் குவித்தது. இதுவரை, தமிழகத்தில் வெளியான மலையாளப் படங்களில் அதிக வசூலைக் குவித்த படம் என்கிற சாதனையை படைத்திருக்கிறது 'மஞ்சுமல் பாய்ஸ்'. இது உலகளவில் ரூ.240 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
'ஜான் ஈ மன்' மலையாள திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானர் சிதம்பரம். இவர் இயக்கத்தில் வெளியான 'மஞ்சுமல் பாய்ஸ்' திரைப்படம் தென்னிந்தியளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்ததாக, இயக்குநர் சிதம்பரம் பாலிவுட் படத்தை இயக்குகிறார்.
இந்த நிலையில், ரஷியாவிலுள்ள சோச்சி நகரில் நடைபெற்ற கினோ பிராவோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட "மஞ்சுமல் பாய்ஸ்" ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றதுடன் சிறந்த இசைக்கான சர்வதேச விருதையும் வென்று அசத்தியுள்ளது. விருதை படத்தின் இயக்குனர் சிதம்பரம் பெற்றார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த விழாவில் திரையிடப்படும் முதல் மலையாள படம் என்ற பெருமையை 'மஞ்சுமல் பாய்ஸ்' பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.